Pages

வியாழன், 28 ஜனவரி, 2010

பயண அனுபவங்கள். - 1

சைனா செல்ல வேண்டியிருந்தது. அலுவலக வேலையாக.

அந்த 15 நாட்களில் சில சுவாரசியமான சம்பவங்கள்.

பணியில் செம்மை கூட்டிய விமான ஊழியர்.

விமான நுழைவாயிலில் இருக்கை அனுமதி சீட்டை சரிபார்க்கும் அந்த NWA ஊழியர் பணியில் வித்தியாசம் கூட்ட வேண்டும் என்று நினைத்திருப்பார் போலும். சாதாரணமாக விமான எண் இருக்கை எண்ணை சரிபார்த்து சீட்டை திருப்பி தருவார்கள் ஒரு புன்னகையுடன். இந்தியாவில் என்றால் புன்னகை நிச்சயம் இருக்காது. ஆனால் இவர் ஒவ்வொருவரின் சீட்டையும் வாங்கி அவர்கள் பெயரை படித்து. மால்கம் நல்வரவு, டைலர் நல்வரவு என்று சொல்லிக்கொண்டிருந்தார். மனதுக்குள் சிரித்துக்கொண்டே எனது முறைக்காக காத்திருந்தேன். எனது சீட்டை பார்த்தவுடன் சார் நல்வரவு என்றார். சீட்டை திருப்பி அவரிடமே கொடுத்துவிட்டு - பயணிகளில் பேதம் பார்க்கக் கூடாது - என் பெயரையும் சொல்லுங்கள் என்றேன்.அவரும் சளைத்தவராக இல்லை. மன்னித்துக்கொள்ளுங்கள். விமானம் தாமதாகிவிடக்கூடாது. அதனால்தான் என்றார். எனது பெயர் - Thirugnana Sambandam Thamizharasan.

நடுவானில் - நல்ல நேரம் நான் பிழைத்துக்கொண்டேன்.

டெட்ராய்டில் இருந்து டோக்கியோ பறந்துகொண்டிருந்தோம். வானமேறி இரண்டு மணி நேரம் ஆகியிருக்கும். இரண்டு பியருக்கு பிறகு கழிவறை சென்று வெளியேவந்து பணிப்பெண்ணிடம் சொன்னேன். "தண்ணீர் வரவில்லை என்று". உள்ளே சென்று பார்த்து வந்தவள் பதட்டமாக கடந்து சென்றாள்.சில மணித்துளிகளுக்கு பிறகு - கேப்டன் பேசினார். "பயணிகளுக்கு வந்தனம். எங்கள் விமான சேவையை தேர்ந்தெடுத்ததற்கு நன்றி. நாம் இப்போது அலாஸ்கா மேல் பறந்துகொண்டிருக்கிறோம். நமது விமானத்தில் சில இயந்திர கோளாறுகள் இருக்கிறது. உங்கள் தலையை திருப்பி சன்னலுக்கு வெளியே பார்த்தால் - நமது விமாத்தின் எரிபொருளை வெளிச்செலுத்திகொண்டிருப்பது தெரியும்.நாம் ஆண்கரேஜில் தரையிறங்க இன்னும் ஒரு மணி நேரம் பிடிக்கலாம்.கோளாறு சரி செய்யப்பட்டபின் திரும்ப நம் பயணம் தொடரும்." பார்த்தேன். விமான பெட்ரோல் புகை மூட்டமாக வெளியேறிக்கொண்டிருந்தது. தரை இறங்குவோமா? இங்கிருந்தே போனால் சொர்க்கம் அருகிலேயே இருக்குமல்லவா?எனது முதல வகுப்பு இருக்கையில் இருந்து எழுந்து விமானத்தின் கடைசி வரை ஒரு வலம் வந்தேன். ஒரே ஒரு குழந்தைகூட தனது இயல்பு மாறவில்லை. கலவரம் இல்லாத முகம் ஒன்றுகூட இல்லை. மதம் போதிக்கும் சிலரையும் பார்த்தேன்.அவர்களும் விதிவிலக்கல்ல. அவர்களுக்கே நம்பிக்கை இல்லாத ஒன்றை சொல்கிறார்களோ? தரையிறங்கி திரும்ப கிளம்ப மூன்று மணி நேரம் ஆனது.

டோக்கியோ -

ஜப்பானில் இந்த தாமதத்தினால் டோக்கியோவிலிருந்து ஷாங்காய் செல்லும் எனது தொடர் பயண விமானத்தை தவற விட்டிருந்தேன். ஹோட்டலுக்கு அந்த விமான நிறுவனமே ஏற்பாடு செய்திருந்தது. அந்த சீனப்பெண் ஹோட்டலுக்கு செல்லும் பேருந்தில்தான் அறிமுகமானாள். அறையில் கையில் எடுத்து சென்றிருந்த பைகளை வைத்துவிட்டு - உணவகம் சென்றேன். அந்த மேஜையில் ஒரு அமெரிக்கன் இருந்தான்.கை குலுக்கி அறிமுகமானவுடன் அவனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததில் இருந்து அவன் ஷாங்காயில் சீனர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியனாக இருப்பதுவரை சொல்லி முடித்தான். பார்த்ததும் உளறுவது இவர்கள் வழக்கம். அதனால் உடனே அவர்கள் நம் உயிர் தோழர்கள் என்று எண்ணிவிடகூடாது. அது அவர்கள் இயல்பு. அந்த சீனப்பெண் வந்தாள். அவள் என் இருக்கை தேடிவந்து ஹலோ சொன்னது ஏன் என்று சிறிது நேரத்தில் தெரிந்தது. ஜப்பான் நாட்டில் பிற கைத்தொலைபேசிகள் வேலை செய்யாது. பேருந்தில் வரும்போது எனது 3G தொலைபேசியை பார்த்திருக்கிறாள்.தான் ஒரு தொலைபேச வேண்டும் எனவும் அவள் போன் இங்கு வேலை செய்யவில்லை எனவும் சொன்னபோது - வழக்கமான வழிசலுடன் எனது 3G பேசியை கொடுத்தேன்.இந்த அய்-போனில் தொடுதிரை இருப்பதால் ஒரு பிரச்சினை. எண்ணை அழுத்திவிட்டு காதில் வைக்கும்போது - ஸ்பீக்கர் படத்தில் நம் காத்து பட்டால் அது எல்லோருக்கும் கேட்கும். அவள் கவலைப்படவில்லை. அமெரிக்காவில் இருக்கும் அவள் கணவனுடன் பேசினாள். அவன் நினைவாகவே இருப்பதாக அவள் சொன்னபோது - உலகில் எல்லா பெண்களும் இப்படித்தானோ? என் மனைவி மட்டும் உசத்தி என்று நான் நினைத்துக்கொண்டிருப்பது தவறு என்று பட்டது. இன்னொரு கால் என்று சொல்லிவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் அவள் பேசினாள்.ஒரு எழவும் புரியவில்லை. மாண்டரின் - சீன மொழி. அரை மணி நேரம் இருக்கும். இந்த அமெரிக்கனும் நானும் இரண்டு பெக் ஜானி வாக்கர் முடித்து சாண்ட் விச்சையும் தின்று முடித்திருந்தோம்.அவன் முகம் அவ்வப்போது மாறியதன் காரணம் மட்டும் புரியவில்லை. போனை கொடுத்துவிட்டு - அவள் வாங்கிய நூடுல்ஸை எடுத்துக்கொண்டு நன்றி சொல்லி கிளம்பியபின், அந்த அமெரிக்கன் கேட்டான். அவள் இப்போது யாரிடம் என்ன பேசினாள் தெரியுமா? தெரியாதென்றேன். அவளுக்கு சீனாவில் ஒரு புருஷன் இருக்கிறான். அவனுக்கு தெரிந்தே இந்த முட்டாள் அமெரிக்கனை மணந்திருக்கிறாள். இன்னும் ஆறு மாதத்தில் அமெரிக்கனை விவாகரத்து செய்து விடுவதாகவும் - அடுத்த ஒரு வருடத்தில் அந்த சீனனை அமெரிக்காவுக்கு அழைத்து செல்லுவதாகவும் சொல்கிறாள்.

இந்த அமெரிக்கனுக்கு மாண்டரின் தெரியும் என அவள் எண்ணவில்லை!.

எனக்கு தலை சுற்றியது. கள்ளக்காதல் ஏதோ தமிழகத்துக்கு மட்டும் சொந்தம் என்கிறார்களே?

இன்னும் இருக்கிறது..... பிறகு சொல்கிறேன். . நிவேதிதா தமிழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக